Sunday, December 26, 2010

கோபம்

தமிழின் மீதல்ல, தமிழ் கவிஞர்கள் மீது,
பெண்கள்,காதல் மற்றும் இயற்கை - இவைகள் எழுத மட்டும் தமிழை பயன்படுத்துவதை தவிர்த்து,
தமிழர்களின் அறியாமை,
தமிழக கல்வி,
தமிழக மக்கள் தரம்,
ஊழல் மற்றும் அரசியல் நாடகங்கள் போன்றவரை பற்றி எழுதவேண்டும்....

Wednesday, December 1, 2010

தகுதியுள்ள பட்டதாரிகள் இல்லை


                    "தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்த நிலையில், 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை' என, தனியார் நிறுவன அதிகாரிகள், அரசிடம் தெரிவித்தனர் என, திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா கூறினார்.



                  திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா பேசியதாவது:தமிழகத்தில் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், தொழில் நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என அரசிடம் முறையிட்டன.

**நன்றி தினமலர் ** 

புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்

புதூர் : 
                  சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய கபடி அணியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜீவகுமாருக்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் மன்னன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சுபாஷ் வரவேற்றார். 



கபடிவீரர் ஜீவகுமார் கூறியதாவது:
                 கன்னியாகுமரி மாவட்டம் தெக்குறிச்சி எனது சொந்த ஊர். மாவட்ட, மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழக அணியில் 5 முறை விளையாடியும், எனக்கு தமிழக அரசு வேலை வழங்கவில்லை. இதனால், 2003ல் மும்பை மேற்கு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும், தமிழக அணிக்காகவே விளையாடி வந்தேன். கர்நாடகாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் எனக்கு வேலை வழங்கியது. அதில் இருந்து கர்நாடக அணிக்காக விளையாடினேன். அதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வு பெற்றேன். இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், நான் தமிழக வீரர் என்று பெருமை அடைகிறேன். மாநில அரசு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் சலுகைகள் போல், கபடி வீரர்களுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். 2011ல் ஈரானில் நடக்கும் உலக கோப்பை கபடியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம், என்றார். 

**நன்றி தினமலர் ** 

Sunday, November 21, 2010

இந்திய ஊழல் வரலாற்றில் புதிய சாதனை..!

              இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.

சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.



1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

  • * 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.
  • * மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
  • * பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.
  • * பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.
  • * கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
  • பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
  • சர்க்கரை ஊழல் 650 கோடி
  • போபர்ஸ் ஊழல் 65 கோடி
  • ஹவாலா ஊழல் 65 கோடி
  • எம்.பி., டிரேடிங் 32 கோடி
  • உர ஊழல் 133 கோடி
  • மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
  • இந்தியன் வங்கி 1,336 கோடி
  • மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
  • நில ஊழல் (பீகார்) 400 கோடி
  • வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
  • நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.
**நன்றி தினமலர் ** 

Thursday, November 18, 2010

வெளிநாடுகளில் இந்தியாவின் கறுப்பு பணம்..!

                    
          இந்தியா சுதந்திரம் அடைந்த 1948 முதல் 2008 வரை கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பணம் கறுப்பு பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடி வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தல் மற்றும் கணக்கில் வராத பணத்தை சுவிஸ் நாட்டில் உள்ள பாங்குளில் போட்டு வருகின்றனர். இந்த கள்ளப்பணத்தை கணக்கில் எடுத்து . யார், யார் ஈடுபட்டுள்ளனர் என கண்டறிந்து இதுவரை உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தப்பாடில்லை.

             இந்தியாவின் கள்பப்பணம் டிபாசிட் ஆண்டுக்கு 11. 5 சதவீதம் வளர்ந்து வந்திருக்கிறது.1948 முதல் 2008 கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பணம் 462 பில்லியன் டாலர் ( 20, 556, 848 000, 000 ) ஆகும். இந்த பணத்தின் மூலம் நாட்டில் வறுமை , மின்சாரம் இல்லாத கிராமங்கள் மேம்படுத்துதல், தடுப்பூசி, குடி நீர் வசதி போன்றவற்றை செய்து முடிக்க முடியும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பணம் போடுபவர்கள் யார் ? : இது போன்ற பணத்தை யார் போட்டுள்ளவர்கள் பொருள் உற்பத்தியாளர்கள், மற்றும் முக்கிய பிரபல புள்ளிகள், பாலிவுட் நடிகர்கள் , கிரிக்கெட் நட்சத்திரங்கள் அடங்குவர்.

**நன்றி தினமலர் ** 

Friday, October 29, 2010

இந்திய வருவாய் துறை..!

              புதுடில்லி : பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு, என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

               ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 



              இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. "நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். 

           இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்' எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். 

**நன்றி தினமலர் ** 

Monday, October 25, 2010

தமிழக அரசும், கேரளா அரசும் போட்ட போட்டி...!

               
சந்தன மரம் கடத்தல்: 
                      கேரள வனப்பகுதிகளில் இயற்கை வளங்கள் அழிவதை கண்ட கேரள அரசு, சந்தன ஆயில் தொழிற்சாலைகளை மூடி நடவடிக்கை எடுத்தது. சந்தன மரங்களை வெட்டுவதற்கான கெடுபிடி கேரளாவில் அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள், சந்தன மரங்களை கடத்தல்காரர்களிடம் கூடுதல் விலைக்கு வாங்கி, ஆயில் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

              இதற்கான சந்தன மரங்களை கடத்தல்காரர்கள் தமிழக வனப்பகுதிகளில், குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெட்டி கேரளாவுக்குள் கடத்திச் செல்கின்றனர். வனப்பகுதிகளில் மட்டுமின்றி, நகருக்குள் பல்வேறு இடங்களில் தனியார் வீடுகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வளர்ந்திருக்கும் சந்தன மரங்களை இரவில் வெட்டி வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர்.

            கேரளாவிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அந்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், தமிழகத்தில் சந்தன மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை, இங்குள்ள வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் முழு அளவில் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மணல், சந்தன மரம் ஆகியவை கேரளாவுக்கு தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது. இதை தடுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்



 ரேஷன் அரிசியும்  மிஞ்சவில்லையே! 
                      மணல், சந்தன மரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியும் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தகுதியான கார்டுதாரர்களில் 70 சதவீதம் பேர் ரேஷன் அரிசி வாங்கினாலும், 30 சதவீதத்தினர் அரிசி வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.


                     இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல்காரர்கள், ரேஷன் கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கூடுதல் விலைக்கு அரிசி வாங்கி ரகசிய இடத்தில் பதுக்குகின்றனர். பல மூட்டைகள் சேர்ந்த பின் சரக்கு ஆட்டோ மற்றும் வேன், ரயில், பஸ்களில் கடத்திச் சென்று கேரள எல்லைக்குள் ஒதுக்குப்புறமான தோட்டங்களில் பதுக்கி வைக்கின்றனர். அவற்றை கிலோ 6 ரூபாய்க்கு வாங்கும் கேரள ஏஜன்ட்கள், பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று கிலோ 9 முதல் 10 ரூபாய் வரை விற்கின்றனர்.
                 
                கடத்தலை தடுக்க தமிழக வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, போலீஸ் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அவ்வப்போது சில வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். எனினும், ரேஷன் அரிசி கடத்தல் புதுப்புது வழிமுறைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

**நன்றி தினமலர் ** 

Sunday, October 24, 2010

ஆசிரியை வீட்டில் மாணவியர்..?


                திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் மாணவியர் பாத்திரம் துலக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.

              விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே ஆசிரியை ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் பள்ளி மாணவியர் வீட்டு வேலை செய்யும் அவலம் தினமும் நடக்கிறது. 



           நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு மூன்று மாணவியர் பள்ளி சீருடையில் ஆசிரியை வீட்டில் இருந்த பாத்திரங்களை துலக்கினர். இதுபோன்று மாணவியர் பலருக்கு இந்த ஆசிரியை தனது வீட்டு வேலைகளை பகிர்ந்தளித்துள்ளார்.

          தன் வகுப்பில் படிக்கும் மாணவியரை வீட்டு வேலைக்கு ஆசிரியை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி பாதித்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், கல்வியில் பின் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற முடியும். 


**நன்றி தினமலர் ** 

Saturday, October 23, 2010

"..ஊழல் ஒரு தீமை.."

                   "அரசியல் உட்பட சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊழல் பரவிவிட்டது. அதை எதிர்த்து போராட இளைய சமுதாயம் முன்வர வேண்டும்'.

                     ஊழல் ஒரு தீமை. அது ஒரு பழைய சமூக நோய். நாட்டின் அரசியல் முழுவதும் அதனால் பாதிக்கப்பட்டுவிட்டது. மருத்துவத்தில் தனிநபர்களின் உடல்நிலையை ஆராய்ந்து அவர்களின் நோய்க்கு ஏற்ற மருந்து கொடுத்து நோயை நீக்குவது போல, ஊழலிலும் தனிநபர்களை விசாரிப்பதன் மூலம், அதை வேரோடு நீக்க முடியும்.



                  நம் கலாசார முறையில் ஏதோ தவறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் மக்கள் அமைதி காக்கக் கூடாது. ஊழலை தங்கள் பள்ளிப் பருவத்திலேயே எதிர்ப்பதில் இருந்து தான் மாணவர்களின் ஊழல் எதிர்ப்பு துவங்குகிறது.

**நன்றி தினமலர் ** 
 

Sunday, October 17, 2010

பொக்கிஷ பட்டியலில் பெரிய கோயில்

 தஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000


   தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின்  1000-ம் வயது பூர்த்தியடைகிறது. UNESCO வின் பாரம்பரிய மிக்க கலை பொக்கிஷ  பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சோழர்களின் கலைக்கோயில் உள்ள தஞ்சையில் இதன் பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது.


**நன்றி தினமலர் **  
 


Saturday, October 16, 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா...!

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' 

               "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்.

             போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'


                "என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம்.

                "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

                 "இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? 

                  இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!'



**நன்றி தினமலர் ** 

Thursday, October 14, 2010

அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்?

           புதுடில்லி:"அரசுத் துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. 

          எனவே, அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி' என, சுப்ரீம் கோர்ட் கருத்து  தெரிவித்துள்ளது. 


                  நாட்டில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாதது துரதிருஷ்டவசமானது. வருமானவரி, விற்பனை வரி, கலால் வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இது மிகவும் கவலை, அதிருப்தி தரும் விஷயம். அரசுத் துறைகளில் பணம் இல்லாமல் தற்போது எந்த வேலையும் நடப்பது இல்லை.இதைப் பார்க்கும்போது, லஞ்ச நடவடிக்கைகளை அரசு ஏன் சட்டமாக்க கூடாது என கேட்கத் தோன்றுகிறது.   

              ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயிக்கலாமே. ஒருவர், தன் வேலையை முடிக்க வேண்டுமெனில், 2,500 ரூபாய் லஞ்சமாக கொடுக்கலாம் என, அறிவித்து விடலாம். 

             இதன்மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர். அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழைகளாக உள்ளனர். அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது.



**நன்றி தினமலர் ** 

Saturday, September 18, 2010

உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்

           உலகம் முழுக்க எத்தனை பேர் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் என்று ஐ.நா. திட்டக்குழு சார்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. 

           உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று அந்த சர்வே தகவலில் கூறப்பட்டுள்ளது. உலகில் பட்டினியால் தவிக்கும் இரண்டில் ஒருவர் இந்தியர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

          
           அது போல இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய ஊட்டசத்து கிடைப்பது இல்லை. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை சரியான உணவு கிடைக்காமல் வளர்வதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. 

           இந்தியா அறிவியல், மருத்து வத்துறைகளில் வளர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் சுகாதாரம் முழுமையாக இல்லை என்று ஐ.நா. சர்வேயில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்கள் விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

          குழந்தைபெறும் போது லட்சத்தில் 254 பெண்கள் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் அதிக பெண்கள் உயிரிழப்பதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது.


**நன்றி தினமலர் **