Monday, October 25, 2010

தமிழக அரசும், கேரளா அரசும் போட்ட போட்டி...!

               
சந்தன மரம் கடத்தல்: 
                      கேரள வனப்பகுதிகளில் இயற்கை வளங்கள் அழிவதை கண்ட கேரள அரசு, சந்தன ஆயில் தொழிற்சாலைகளை மூடி நடவடிக்கை எடுத்தது. சந்தன மரங்களை வெட்டுவதற்கான கெடுபிடி கேரளாவில் அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள், சந்தன மரங்களை கடத்தல்காரர்களிடம் கூடுதல் விலைக்கு வாங்கி, ஆயில் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

              இதற்கான சந்தன மரங்களை கடத்தல்காரர்கள் தமிழக வனப்பகுதிகளில், குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெட்டி கேரளாவுக்குள் கடத்திச் செல்கின்றனர். வனப்பகுதிகளில் மட்டுமின்றி, நகருக்குள் பல்வேறு இடங்களில் தனியார் வீடுகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வளர்ந்திருக்கும் சந்தன மரங்களை இரவில் வெட்டி வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர்.

            கேரளாவிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அந்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், தமிழகத்தில் சந்தன மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை, இங்குள்ள வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் முழு அளவில் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மணல், சந்தன மரம் ஆகியவை கேரளாவுக்கு தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது. இதை தடுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்



 ரேஷன் அரிசியும்  மிஞ்சவில்லையே! 
                      மணல், சந்தன மரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியும் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தகுதியான கார்டுதாரர்களில் 70 சதவீதம் பேர் ரேஷன் அரிசி வாங்கினாலும், 30 சதவீதத்தினர் அரிசி வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.


                     இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல்காரர்கள், ரேஷன் கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கூடுதல் விலைக்கு அரிசி வாங்கி ரகசிய இடத்தில் பதுக்குகின்றனர். பல மூட்டைகள் சேர்ந்த பின் சரக்கு ஆட்டோ மற்றும் வேன், ரயில், பஸ்களில் கடத்திச் சென்று கேரள எல்லைக்குள் ஒதுக்குப்புறமான தோட்டங்களில் பதுக்கி வைக்கின்றனர். அவற்றை கிலோ 6 ரூபாய்க்கு வாங்கும் கேரள ஏஜன்ட்கள், பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று கிலோ 9 முதல் 10 ரூபாய் வரை விற்கின்றனர்.
                 
                கடத்தலை தடுக்க தமிழக வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, போலீஸ் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அவ்வப்போது சில வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். எனினும், ரேஷன் அரிசி கடத்தல் புதுப்புது வழிமுறைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

**நன்றி தினமலர் ** 

No comments:

Post a Comment