கோவையில் வீடுவீடாக வந்த வாக்காளர்களின் போன் நம்பரை வாங்கிச் சென்று இலவசமாக ரீசார்ஜ், அவர்கள் சொல்லும் கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் என சலுகைகளை தாராளமாக, ஏராளமாக அரசியல் கட்சியினர் அளித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆங்காங்கே கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்போது வாகனங்களில் பணம் இருப்பது தெரியவந்தால் அவற்றை பறக்கும்படை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள்.
இதையும் மீறி பல்வேறு விதத்தில் வாக்காளர்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர் வீடுவீடாக சென்று வீட்டு உரிமையாளரின் செல்போன் எண் மற்றும் அவர்களின் வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை வாங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பிற அரசியல் கட்சியினருக்கு தெரிய வரவே செல்போன் எண் வாங்கிய நபரை பிடிக்க ஓடினார்கள். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது பற்றி செல் போன் எண் கொடுத்த ஒருவர் கூறும்போது " வீடு வீடாக வந்து செல்போன் எண்ணை வாங்கியவர்கள், அந்த செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து கொடுப்பதாகவும் இல்லை என்றால் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் எந்த அரசியல் கட்சியினர் என்று தெரியாது என்றும் கூறினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment