Saturday, February 12, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா?

சி.பி.ஐ., வலையில், "கலைஞர் டிவி'
                     "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் தொலைத் தொடர்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, "கலைஞர் டிவி' 200 கோடி ரூபாய் பெற்ற விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                     "ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதற்காக ராஜாவுக்கு வழங்கப்பட்ட லஞ்சப்பணம் தான் இது. இந்த பணம் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "எகனாமிக் டைம்ஸ்' மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற ஆங்கில நாளிதழ்களும், என்.டி.டி.வி., - டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில, "டிவி' சேனல்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

                


                               "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா இவரது நிறுவனம், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை, 1,537 கோடி ரூபாய்க்கு பெற்ற சில மாதங்களிலேயே, தனது 45 சதவீத பங்கை, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான, "எடிசலாட்' நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த விவகாரத்தில், "ஸ்வான்' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் ராஜா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. "ஸ்வான்' நிர்வாகி ஷாகித், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான, "கலைஞர் டிவி'யில், 214 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., நேற்று தெரிவித்தது. பல்வாவுக்கு சொந்தமான, "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பல்வாவின் உறவினர்கள் இயக்குனர்களாக உள்ள, "டி.பி.குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு, "கலைஞர் டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ., தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

**நன்றி தினமலர் ** 

No comments:

Post a Comment