Sunday, February 20, 2011

கால்நடை உணவாகிறது ரூ. 1 ரேஷன் அரிசி..!

                   
           தற்போதைய விலைவாசி உயர்வால், தவிடு ஒரு கிலோ ரூ. 8க்கும்,மாட்டு தீவனம் கிலோ ரூ. 14க்கும் விற்கும் போது, ரேஷனில் கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைப்பது, பலரை சிந்திக்க வைத்தது. விளைவு, ரேஷன் அரிசியை கொண்டு, மாட்டுக்கு உணவு தயாரிக்க மக்கள் தயாராகி விட்டனர். அரிசி வாங்காதவர்களது ரேஷன் கார்டுகளை பெற்று, அரிசியை மொத்தமாக வாங்குகின்றனர். 50 கிலோ அரிசியுடன், கோதுமை,சோளம், மக்காச்சோளத்தை தலா 10 கிலோ வீதமும், 2 கிலோ உளுந்தை கலந்து, மெஷினில் அரைக்க, கிலோவுக்கு ரூ. 1 அரவைக் கூலி கொடுத்து மாட்டு தீவனமாக மாற்றுகின்றனர். இதற்கு ரூ. 550 தான் செலவாகிறது. இதே அளவு மாட்டு தீவனத்தை விலை கொடுத்து வாங்கினால், ரூ. 1,200 தேவைப்படுகிறது. இந்த மாவை கொதிக்க வைத்து, தொட்டியில் கலந்து கறவை மாடுகளுக்கு கொடுக்கின்றனர். இதை உண்ணும் மாடுகள் 2 லிட்டர் பால் கூடுதலாக கறக்கின்றன என்கின்றனர். 



                                  ரேஷனில் வழங்கப்படும் ரூ. 1 ரேஷன் அரிசி, தவிட்டை விட, விலை குறைவாகவும், போதிய தரம் இல்லாமலும் கிடைப்பதால், கிராமப்புறங்களில் கால்நடைக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
2006 சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அரிசி போதிய தரம் இல்லாததால், விரும்பி வாங்குவோர் குறைந்த நிலையில், கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. அவ்வப்போது, ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிபட்டதாக தகவல் வந்தாலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. 

**நன்றி தினமலர் ** 

Saturday, February 12, 2011

குறும்படங்கள்...!

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் "கலைஞர் டிவி'க்கு கைமாறியதா?

சி.பி.ஐ., வலையில், "கலைஞர் டிவி'
                     "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் தொலைத் தொடர்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, "கலைஞர் டிவி' 200 கோடி ரூபாய் பெற்ற விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                     "ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதற்காக ராஜாவுக்கு வழங்கப்பட்ட லஞ்சப்பணம் தான் இது. இந்த பணம் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "எகனாமிக் டைம்ஸ்' மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற ஆங்கில நாளிதழ்களும், என்.டி.டி.வி., - டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில, "டிவி' சேனல்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

                


                               "ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா இவரது நிறுவனம், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டை, 1,537 கோடி ரூபாய்க்கு பெற்ற சில மாதங்களிலேயே, தனது 45 சதவீத பங்கை, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான, "எடிசலாட்' நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த விவகாரத்தில், "ஸ்வான்' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் ராஜா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. "ஸ்வான்' நிர்வாகி ஷாகித், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான, "கலைஞர் டிவி'யில், 214 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., நேற்று தெரிவித்தது. பல்வாவுக்கு சொந்தமான, "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பல்வாவின் உறவினர்கள் இயக்குனர்களாக உள்ள, "டி.பி.குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு, "கலைஞர் டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ., தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

**நன்றி தினமலர் ** 

Monday, February 7, 2011

பிச்சையெடுக்கும் சிறுவர்கள்

                         ராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டவர்கள் ஏராளம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை கிடைப்பதாலும், யாத்ரீகர்கள் தரும் துணி, உணவுக்காக பிச்சையெடுத்து சம்பாதிக்கின்றனர். வருமானம் அதிகளவில் வருவதால் வெளியூர்களில் இருந்து வந்து இங்கு முகாமிட்டுள்ள இவர்கள், ராமேஸ்வரம் கோயில், அக்னிதீர்த்த கடற்கரை, கெந்தமாதன பர்வதம் பகுதியில் பிச்சையெடுப்பதை தொழிலாக செய்கின்றனர். இதில் உள்ளூர் கும்பலை சேர்ந்தவர்களும், வெளியூர் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாக பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.



                   இதன் வருவாயில் ஒரு பகுதியை குடிப்பதற்கும், மீதியை ஊரிலுள்ள தங்களது குடும்பத்திற்கு அனுப்பி வரும் இவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.  பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்களையும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. பெற்றவர்களே பணத்துக்காக பிள்ளைகளை இச்செயலில் ஈடுபடுத்துகின்றனர்.

**நன்றி தினமலர் ** 



தமிழக அரசின் இலவசத்தால் வந்த பலன்

               தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.



               மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும். இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய். வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

**நன்றி தினமலர் **