புதூர் :
சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய கபடி அணியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜீவகுமாருக்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் மன்னன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சுபாஷ் வரவேற்றார்.
கபடிவீரர் ஜீவகுமார் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் தெக்குறிச்சி எனது சொந்த ஊர். மாவட்ட, மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழக அணியில் 5 முறை விளையாடியும், எனக்கு தமிழக அரசு வேலை வழங்கவில்லை. இதனால், 2003ல் மும்பை மேற்கு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும், தமிழக அணிக்காகவே விளையாடி வந்தேன். கர்நாடகாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் எனக்கு வேலை வழங்கியது. அதில் இருந்து கர்நாடக அணிக்காக விளையாடினேன். அதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வு பெற்றேன். இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், நான் தமிழக வீரர் என்று பெருமை அடைகிறேன். மாநில அரசு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் சலுகைகள் போல், கபடி வீரர்களுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். 2011ல் ஈரானில் நடக்கும் உலக கோப்பை கபடியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம், என்றார்.