இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.
சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.
1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?
- * 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.
- * மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
- * பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.
- * பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.
- * கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
- பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
- சர்க்கரை ஊழல் 650 கோடி
- போபர்ஸ் ஊழல் 65 கோடி
- ஹவாலா ஊழல் 65 கோடி
- எம்.பி., டிரேடிங் 32 கோடி
- உர ஊழல் 133 கோடி
- மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
- இந்தியன் வங்கி 1,336 கோடி
- மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
- நில ஊழல் (பீகார்) 400 கோடி
- வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
- நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.
**நன்றி தினமலர் **
No comments:
Post a Comment